2008ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ம் திகதி சுயாதீன ஊடக வலையமைப்பின் ஓர் அங்கமாக வசந்தம் வானொலி அப்போதைய தலைவர் அனுர ஸ்ரீவர்த்தன என்பவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்பகாலப்பகுதியில் திரு. ஜீவரட்ணகுமார் பொறுப்பாளராகவும் உதவிப்பொறுப்பாளராக சித்திக் M.ஹனீபாவும் அறிவிப்பாளர்கள் 06 பேரும் இணைந்து கடமையாற்றினர். இன்று வசந்தம் வானொலியின் உதவி முகாமையாளராக திரு. M. L. கிருபாகரனும் 17 அறிவிப்பாளர்களுடன் 28 ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் வெற்றிநடை போடுகிறது. தழிமின் சுவாசம் எனும் மகுட வாசகத்தை தாங்கி ஆரம்பிக்கப் பட்ட வசந்தம் வானொலியானது ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமேயான பிராந்திய வானொலியாகவே தனது சேவையை வழங்கியது.
கிழக்கு மாகாணத்தின் எந்த திசையில் திரும்பினாலும் 97.6 எனும் அலைவரிசையில் வசந்தம் ஓங்கி ஒலித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த வெற்றியே பின்னர் 97.3 எனும் அலைவரிசை மூலம் யாழ் மண்ணையும் தொட்டு இலங்கை முழுவது தனது இசை மெட்டுக்களை ஓங்கி ஒலிக்கச் செய்தது. 2011 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அறிவித்தலின்படி சகல வானொலிகளின் அலைவரிசைகளும் மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் எமக்கு 102.6 FM/ 102.8 FM ஆகிய அலைவரிசைகள் கிடைக்கவே இலங்கை எங்கும் எங்கள் கலையக ஓசை தெட்டத் தெளிவாக ஒலித்தது. நாடெங்கிலும் மட்டுமல்லாது கடல் கடந்தும் www.vasanthamfm.lk என்னும் இணையத்தின் ஊடாகவும் பல நேயார்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பெயர் பெற்றுள்ளது. நாளுக்கொரு வானொலியென முளைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலப்பகுதியில் இன்னும் இதன் தரம் நிரந்தரமாக இருக்கக் காரணம் சிறப்பான வழிகாட்டல் பயனுள்ள நிகழ்ச்சிகள், திறமையான அறிவிப்பாளா்களும் என்றும் அன்பான நேயார் சொந்தங்களும்தான்.
இவற்றையெல்லாம் தாண்டி அன்றும் இன்றும் என்றும் ஆக்கமும் ஊக்கமும் அளித்திருக்கும் நேயார்களின் அன்புக்கு நாம் என்றுமே கடமைப்பட்டவா்கள். இத்துடன் நில்லாது இனி வரும் நாட்களிலும் உங்கள் அன்பும் ஆதரவும் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறது நமது பயணம்.