Header

செப்டம்பர் மாதம் 15ஆம் திகதியின் பின்னர் டிஜிட்டல் தடுப்பூசி அட்டை!

 

கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்வதைத் தடுப்பதற்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 75 சதவீதத்தை விட அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியமைக்கான டிஜிட்டல் அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார். இதேவேளை, தற்போது வரையில் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதவது, 5,949,431 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நாட்டில் இதுவரை 12,149,634 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்லும் போது, கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாகும் என ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று அறிவித்திருந்த கொவிட்-19 செயலணியின் பிரதானி ஷவேந்திர சில்வா, இந்த நடைமுறை செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்படுமென அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


logo