Header

தென்னாபிரிக்க தொடருக்கான 30 பேர்கொண்ட இலங்கை அணி அறிவிப்பு…!

 

தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகளுக்கான 30 பேர்கொண்ட முதற்கட்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் முக்கிய மாற்றமாக அனுபவ விக்கெட் காப்பாளர், துடுப்பாட்ட வீரர் “தினேஷ் சந்திமால்” இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக மார்ச் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் தொடரில், சந்திமால் விளையாடியிருந்த நிலையில், தற்போது டயலொக் SLC T20 தொடரில் சிறப்பாக பிரகாசித்துவருவதன் காரணமாக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

இவருடன், டயலொக் SLC T20 தொடரில் சிறப்பாக பிரகாசித்துவந்த “கமிந்து மெண்டிஸ்” மற்றும் “லஹிரு மதுஷங்க” ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக “கமிந்து மெண்டிஸ்” இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடியவர்.

இவர், இலங்கை அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி, சிறந்த பெறுபேற்றையும் பெற்றுள்ளார்.

தற்போது டயலொக் SLC T20 தொடரில் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று அரைச்சதங்களை பதிவுசெய்து மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

“லஹிரு மதுஷங்க” வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய சகலதுறை வீரர் என்பதை டயலொக் SLC T20 தொடரில் நிரூபித்துள்ளார். புளூஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 39 பந்துகளில் 74 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இவர், 2017ம் ஆண்டு இலங்கை அணிக்காக அறிமுகமாகியிருந்த போதும், கடைசியாக 2019ம் ஆண்டு இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார். தற்போது, இவர் சிறிய உபாதைக்கு முகங்கொடுத்திருந்தாலும், மீண்டும் இவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், புதுமுக வீரர்களாக “மஹீஷ் தீக்ஷன, புலின தரங்க, சஹன் ஆரச்சிகே மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர், டயலொக் SLC T20 தொடரில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியதன் ஊடாக, தேசிய அணியில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்கள், கடந்த வருடம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கிலும் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

அத்துடன், கொவிட் 19 தொற்றுக்கு ஆளாகியிருக்கும் “குசல் பெரேரா”, அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், தொடரில் விளையாடுவதற்கு இவர் தயாராகிவிடுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், அனுபவ வீரர்களான “திமுத் கருணாரத்ன”, “சுரங்க லக்மால்” மற்றும் “அஞ்செலோ மத்தியூஸ்” ஆகியோர் குழாத்தில் இணைக்கப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 30 பேர்கொண்ட அணியில் இருந்து, தென்னாபிரிக்க தொடருக்காக 20 தொடக்கம் 22 வீரர்கள் தெரிவுசெய்ப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த 30 வீரர்களும் T20 உலகக்கிண்ணத்துக்கான உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிகளில் ஈடுபடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

logo