மத்திய பிரதேசத்தில் பேருந்தில் பயணம் செய்யும்போது, எதிர் திசையில் இருந்து வந்த லொரி மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரிலிருந்து இச்சாபூர் சென்றுகொண்டிருந்த பேருந்தில் 13 வயது சிறுமி தன் தாய் மற்றும் சகோதரியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து இந்தூர் – இச்சாபூர் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது அந்த சிறுமிக்கு வாந்தி வருவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்து சென்றுகொண்டிருக்கும்போதே வாந்தி எடுப்பதற்காக அந்த சிறுமி தலையை ஜன்னல் வழியே வெளியே நீட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தலை ஜன்னலின் பக்கவாட்டில் மாட்டிக் கொண்டது.
அந்த சமயத்தில், எதிர்திசையில் வந்த லொரி அந்த சிறுமியின் தலை மீது மோதியதில், தலை துண்டாகி சாலையில் விழுந்தது. தன் கண் முன்னே மகளின் தலை துண்டானதைப் பார்த்த அவரது தாயும், சகோதரியும் கதறி அழுதனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லொரி ஓட்டுனரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
0