Header

மனிதர்களின் உமிழ் நீர் எதிர்காலத்தில் விஷமாக மாறலாம்!

 

பாம்பிற்கு பல்லில் விஷம் மனிதர்களுக்கு நாக்கில் விஷம் என்பது பழமொழி. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் மனிதர்களுக்கு விஷத்தை உருவாக்கும் திறன் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Proceedings of the National Academy of Sciences இல் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் விஷத்தை உருவாக்க மனிதர்களுக்கு ஒரு டூல் கிட்(tool kit) இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒகினாவா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரி பல்கலைக்கழகம் (OIST) மற்றும் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாம்புகளின் விஷம் போல மனிதர்களின் உமிழ்நீர் விஷமாக மாற சாத்தியம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மனிதர்கள் மற்ற அனைத்து பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றோடு சேர்ந்து விஷத்தை உருவாக்கும் திறனை கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வின் முடிவில் பாலூட்டிகளில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளுக்கும், பாம்புகளில் உள்ள விஷ சுரப்பிகளுக்கும் இடையே உள்ள ஒரு தொடர்பை கண்டுபிடித்துள்ளனர். வாய்வழியே விஷம் உருவாவதற்கு தேவையான மரபணு அடித்தளமானது, ஊர்வன மற்றும் பாலூட்டிகள் என இரண்டிலுமே உள்ளது என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியடையும் கட்டத்தில் பாம்புகளை போல விஷத்தை வாய்வழியே கக்கும் நிலை கூட வரலாம் என்று ஆய்வு கூறுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதலாக பாம்புகளில் உள்ள விஷ சுரப்பிகளுக்கும், பாலூட்டிகளின் உமிழ்நீர் சுரப்பிகளுக்கும் இடையே உள்ள மூலக்கூறு தொடர்புக்கான ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு உறுதியான ஆதாரங்களாக இந்த ஆய்வு வழங்கி உள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்விற்கு தைவான் ஹபு பாம்புகளின் விஷ சுரப்பிகளைப் பயன்படுத்தியுள்ளனர். மற்றும் சுமார் 30,000 சுரப்பிகளை அடையாளம் கண்டுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இதிலிருக்கும் பல மரபணுக்கள் மன அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாப்பதில் முக்கியமானவை என்பதையும் தெரிந்து கொண்டனர். இதில் ஆச்சரியமூட்டும் வகையில் மனிதர்கள், சிம்பன்சிகள் மற்றும் நாய்கள் போன்ற பாலூட்டிகளிலும் இதே போன்ற மரபணுக்கள் காணப்பட்டுள்ளன.

மற்ற புரதங்களை ஜீரணிக்கும் புரதமான kallikreins என்ற புரதம் நம் உமிழ்நீரில் சுரப்பதாகவும், இது பல விஷ உயிரினங்கள் வெளிப்படுத்தும் விஷங்களின் முக்கிய ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல விஞ்ஞானிகள் இது உண்மை என்று உள்ளுணர்வாக நம்புகின்றனர். இது ஆரம்பகால உமிழ்நீர் சுரப்பிகளில் இருந்து விஷ சுரப்பிகள் உருவாகின என்ற கோட்பாட்டிற்கான முதல் உண்மையான உறுதியான சாட்சியாக இருக்கிறது என ஆய்வின் முதன்மை ஆசிரியர் அக்னீஷ் பருவா கூறியுள்ளார். சரியான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ், மனிதர்கள் உண்மையில் விஷத்தை உருவாக்க முடியும். இருப்பினும் பல வல்லுநர்கள் இது நடப்பதற்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் சில சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ், எலிகள் அவற்றின் உமிழ்நீரில் அதிக நச்சு புரதங்களை உருவாக்கும் இனப்பெருக்க நிலையை ஒருவேளை அடைந்தால் , சில ஆயிரம் ஆண்டுகளில் மனித இனம் விஷ எலிகளை சந்திக்க நேரிடும் என்று பருவா குறிப்பிட்டார்.

 

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo