Header

ஒருநாள் வீட்டில் அம்மா இல்லை என்றால் என்ன நடக்கும்?


ஒரு குடும்பத்தில் அப்பாவின் பங்கு உழைத்துக்கொடுப்பதென்றால், அம்மாவின் பங்கு முழு குடும்பத்தையும் நடத்திச்செல்வதாக அமைகிறது. அப்பாவினுடைய வேலையை கண்டிப்பாக அம்மாவால் செய்ய முடியும் . ஆனால் அம்மாவின் பாரிய பொறுப்பை அப்பாவால் ஏற்பதென்பது மிகவும் கடினம். எவ்வளவுதான் பெண்கள் குடும்பத்திற்காக ஓடாய் தேய்ந்தாலும் பெண்கள் வீட்டிற்காக செய்யும் எல்லா வேலைகளும் குடும்ப உறுப்பினர்களால் கவனிக்கப்படாமலே போகிறது.

வீட்டை சரியாக பராமரிப்பதில் இருந்து, சமைப்பது, துணிதுவைப்பது, குழந்தைகளை கவனிப்பது, கழிவறைகளை சுத்தம் செய்வது, பாத்திரங்களை சுத்தப்படுத்துவது போன்ற அனைத்து வேலைகளையும் ஒரு பெண் செய்கிறாள். அதுவே, அவள் ஒரு நாளைக்கு வீட்டில் இல்லையென்றால் என்ன நடக்கும் என்று நாம் யோசித்திருக்கின்றோமா? ஆனால் உண்மையில் அம்மா வீட்டில் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய ஒரு பெண் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளார். எனவே, அவர் சில நாட்களுக்கு வீட்டு வேலையை செய்வதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு அவர் சமைப்பது, சலவை செய்வது போன்ற வேலைகளை செய்வதை முற்றிலும் நிறுத்திவிட்டார். பிறகு என்ன நடந்தது என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குடும்பத் தலைவி வீட்டு வேலைகள் செய்யவில்லையென்றால் என்ன நடக்கும்? பரிசோதனை செய்து பார்த்த தாய்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் வீட்டில் வேலைகள் செய்வதை நிறுத்த முடிவு செய்தேன். நான் தினமும் வீட்டில் இரவு உணவுகளை செய்து வருகிறேன். மேலும் வீட்டை சுத்தப்படுத்த எல்லா பணிகளையும் செய்து நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து செய்து போரடித்து போனதை தொடர்ந்து இந்த பரிசோதனையை அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால், அவருக்கு மேலும் ஒரு பெரிய தலைவலிதான் காத்திருந்தது.

வீடு முழுவதும் துவைக்க வேண்டிய துணிகள் குப்பை போல குவிந்திருந்தன. மேலும் அவரது மற்றொரு பதிவில் வீட்டில் எந்த ஒரு ஸ்பூனும் இல்லாததால் பேபி ஸ்பூன் வைத்து தேநீர் தயாரிப்பது போல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இப்படி மூன்று நாட்கள் வீட்டில் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருந்த சமயங்களில், அவரது கணவர் லேசாக சில வேலைகளை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். 3 நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் தனது அன்றாட பணிகளை தொடங்க ஆரம்பித்துள்ளார். பெண்கள், தங்கள் குடும்பத்தினர் மீது உள்ள அன்பு காரணமாக அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். காதல் பெண்களை பொறுமையானவர்களாக மாற்றுகிறது. அதுவே அன்பு எங்களை சோர்வடையச் செய்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo