
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை. அந்தளவு பெண்களின் பங்களிப்பு அனைத்து துறைகளிலும் இருக்கிறது. அதற்கான இன்னுமொரு உதாரணம் இதோ, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெண் விமானிகள் மாத்திரம் இணைந்து ஏர் இந்திய விமானம் ஒன்றை இயக்கி சாதனை படைத்துள்ளனர். உலகின் மிக நீளமான விமானப் பாதையான வடதுருவம் வழியாக , ஏர் இந்தியாவின் இளம் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் இந்த வராலாற்று சாதனையை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் சென்பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூர் வரையிலான 16,000 கி.மீ., நீளமுடைய சவால் நிறைந்த பாதையை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடக்க வேண்டும். இத்தகைய சவால் நிறைந்த தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான அனுபவமும், திறமையும் கூடிய தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மாத்திரமே முடியும். பல காலமாக இத்தகைய நீண்ட விமான பயணத்திற்கு ஆண் விமானிகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானிகள் கூட்டாக இணைந்து வட துருவத்தின் மேலான இந்த நீளமான பாதையில் விமானத்தை இயக்கியுள்ளனனர். விமானப் பயணத்தை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு சோயா அகர்வால் என்ற பெண் கெப்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 9ம் திகதி இரவு 8.30 மணிக்கு பிரான்சிஸ்கோவிலிருந்து ஏர் இந்தியா விமானம் நான்கு பெண் விமானிகள் மற்றும் 238 பயணிகளுடன் புறப்பட்டது. பின்னர் வடதுருவத்தைக் கடந்து அட்லாண்டிக் கடல் வழியாக சுமார் 17 மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணித்த விமானத்தை இன்று அதிகாலை 3.20 பெங்களூர் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரை இறக்கியுள்ளனர் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள்.
238 பயணிகளுடன் பாதுகாப்பாக பெங்களூர் வந்து இறங்கி வரலாற்று சாதனைப் படைத்த கேப்டன் சோயா உள்ளிட்ட நான்கு பெண் விமானிகளுக்கு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அப்ஸ்டோரில் வட்ஸ்அப் ஐ வீழ்த்தி முதலிடம் பிடித்துக்கொண்ட ‘சிக்னல்’ செயலி
- மாஸ்டர் பட காட்சிகள் இணையத்தளத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சியில்…
0