Header

நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயது நிஜ கதாநாயகன்

 

வெறுமனே பாசம் என்பதை திரைப்படங்களிலேயே பார்த்து ரசிக்க முடிகிறது இப்போதெல்லாம். இப்போதைய அவசர உலகில் அன்பாக பழகவோ, இல்லை குடும்பங்களுடன் சேர்ந்து வாழவோ நேரமில்லை. அப்படியிருந்தும் சிறுவர்களிடமாவது அந்த அன்பை , பாசத்தை காணக்கிடைக்கின்றதே அதுவே பெரிய விடயம்தான்.

கடந்த 9 ஆம் திகதியன்று அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் கடிக்க வருவதைப் பார்த்து, உடனடியாக முன்னால் பாய்ந்து தடுத்துள்ளார். இதனால் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆனாலும், தங்கையை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடிக் காப்பாற்றியிருக்கின்றான் அந்த 06 வயது சிறுவன் .

இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பிரிட்ஜரின் புகைப்படத்துடன் சம்பவத்தையும் பதிவிட்டுள்ளார். “என் சகோதரரின் மகன் ஒரு ஹீரோ. தாக்க வந்த நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான். அவனே முன்னால் வந்து நின்று தங்கையைப் பாதுகாக்க நாயின் கடிக்கு ஆளாகியுள்ளான். இதுபற்றிக் கேட்டபோது, ‘அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்று இருந்திருந்தால் அது நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன்’ என்று அந்த சிறுவன் கூறியதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நாய் கடித்ததால் சுமார் 90 தையல்கள் போடப்பட்டிருக்கின்றது பிரிட்ஜரின் முகத்தில். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளான்.
பிரிட்ஜர் பற்றிய பதிவைப் பகிர்ந்திருக்கும் ஹொலிவுட் நட்சத்திரங்களான மார்க் ரஃபல்லோ மற்றும் ஆன் ஹாத்வே ஆகியோர், அவரது துணிச்சலை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

logo