Header

தங்க, வெள்ளி முகக்கவசங்கள்

 

உலக மக்களையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரொனா பெருந்தொற்று அனைத்து தரப்பு மக்களையும் முகக் கவசம் அணிய வைத்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களை பார்த்து மற்றவர்கள் அச்சப்படும் சூழலும் நிலவி வருகின்றது.

இந்நிலையில் சாதாரண துணி முகக்கவசங்கள் முதல் மருத்துவர்கள் பயன்படுத்தும் என் 95 முகக்கவசங்கள் வரை அனைத்து விதமான முகக் கவசங்களும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நகைபட்டறை உரிமையாளர் தங்கம் மற்றும் வெள்ளியில் எளிமையாக பயன்படுத்தும் வகையில் முகக் கவசங்களை தயாரித்து வருகின்றார்.

தங்கம் மற்றும் வெள்ளியை மெல்லிய கம்பிகளாக மாற்றி, அந்த மெல்லிய கம்பியின் மூலம் முகக் கவசம் வடிவமைக்கப்படுகின்றது. முதலில் பரிசோதனை அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளியில் முகக் கவசம் தயாரித்ததாகவும், இப்போது இந்த முகக்கவசங்களுக்கு முன் பதிவுகள் செய்யப்பட்டிருப்பதால் அதனை தொடர்ந்து செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தங்கம் மற்றும் வெள்ளியை 0.06 மில்லி மீட்டர் மெல்லிய கம்பியாக மாற்றி முகக் கவசம் செய்வதாகவும், மக்கள் இவற்றை விரும்புவதால் இதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

தற்போது சந்தையில் இருக்கும் கவசங்கள் கப் போல இருக்கும் எனவும், ஆனால் இங்கு மெல்லிய நூல் போன்ற கம்பியால் தயாரிக்கப்படுவதால் துணி முகக் கவசம் போலவே இருக்கும் எனவும் தெரிவித்தார். திருமணத்திற்கு இந்த வகையான தங்கம் மற்றும் வெள்ளி முகக் கவசங்கள் ‘ரிச்சான’ தோற்றத்தை கொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிங்கிள் லேயர் முதல் நான்கு லேயர் வரை தேவைக்கு ஏற்ப இந்த முக கவசத்தை வடிவமைத்து கொள்ள முடியும் எனவும், 18 கரட் 45 கிராம் தங்கத்திலும், 22 கரட் 52 கிராம் தங்கத்திலும் இந்த முகக்கவசத்தை செய்ய முடியும் எனவும், 22 கரட் தங்கத்தில் முகக் கவசம் செய்வது மிக மென்மையாக இருக்கும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முகக் கவசம் செய்ததாகவும்,மிகவும் கவனத்துடன் பொறுமையாக இந்த முகக் கவசத்தை செய்ய வேண்டி இருப்பதாகவும் குடும்ப நபர்களுடன் இணைந்து மட்டுமே இந்த முகக் கவசம் செய்வதாவும், ஆடம்பரமாக இருப்பவர்களுக்கு இந்த முகக் கவசம் பயன்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தங்கத்தில் தயாரிக்கப்படும் முகக் கவசத்தின் விலை 2 இலட்சத்து 70 ஆயிரம் வரை இருக்கும் எனவும், வெள்ளியில் தயாரிக்கப்படும் முக கவசத்தின் விலை 15 ஆயிரம் வரை இருக்கும் எனவும் தங்க நகை வடிவமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo