Header

உலகக்கிண்ணத்தை வென்று ஓராண்டு நிறைவு – இறுதி ஆட்டத்தை இப்போது நினைத்து பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது!

 

சுப்பர் ஓவருக்கு மத்தியில் வென்ற 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தை இன்று நினைத்து பார்த்தாலும் அதே பதற்றம் தொற்றிக்கொள்கிறது, என்று இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடந்த 12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிசுற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த நியூசிலாந்து அணி 8 விக்கட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் நிறைவில் 241 ஓட்டங்களை பெற்றதனால் போட்டித்தொடர் ‘சமநிலையில் முடிவடைந்தது.

வெற்றியை தீர்மானிக்க கொண்டு வரப்பட்ட சுப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் மறுபடியும் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து அதிக 4 ஓட்டங்களை விளாசிய அணி என்ற வகையில் இங்கிலாந்து அணி முதல்முறையாக உலக கிண்ணத்தை வெற்றிகொண்டது. 4 ஓட்டங்களின் எண்ணிக்கையின்படி வெற்றியாளரை முடிவு செய்யும் விதிமுறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த விதிமுறையை சில மாதங்களில் ஐ.சி.சி. நீக்கி விட்டது.

கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பான அந்த இறுதிப்போட்டி நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இதை நினைவு கூர்ந்த இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டார் .

கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடு காரணமாக கடந்த 4 மாதங்கள் கொஞ்சம் சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் வீட்டில் ஓய்வில் இருந்தபடி 2019-ம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியை பார்க்கும் வாய்ப்பையும் கொரோனா உருவாக்கி தந்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தொலைக்காட்சி மூலம் மூன்று முறை உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முழுமையாக பார்த்து விட்டேன். இறுதி ஆட்டத்தை முதல்முறையாக இரசித்து பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதுவும் வியப்புக்குரிய ஒரு அனுபவம் தான். ஆனாலும் இந்த போட்டியை ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போது இன்னும் எனக்குள் அதே பதற்றம் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்டம் இடைவிடாது ‘நீயா-நானா’ என்ற பரபரப்பும், நெருக்கடியும் நிறைந்ததாக நகர்ந்தது. இத்தகைய ஆட்டத்தில் நானும் பங்கெடுத்தது பெருமை அளிக்கிறது.

எந்த ஒரு அணியும் 50 ஓவர் உலகக்கிண்ணத்தை வென்ற பின்னர் தொடர்ச்சியாக 20 ஓவர் உலகக்கிண்ணத்தை வென்றதில்லை. அந்த சாதனையை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வெளிநாட்டில் நடக்க இருக்கும் அடுத்த இரண்டு 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிகளில் ஏதாவது ஒன்றை வென்றாலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கும். இரண்டு 20 ஓவர் உலகக்கிண்ணத்தையும் கைப்பற்றினால் அது 50 ஓவர் உலகக்கிண்ணத்தை வென்றதை விட மகத்தான சாதனையாக அமையும் என தெரிவித்தார் .

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo