Header

ஐவொரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்

 

ஆப்பிரிக்க நாடான ஐவொரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி தனது 61 வது வயதில் காலமானார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நேற்று முன்தினம் அவர் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட போது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வரும் ஒக்டோபர் மாதம் அந்த நாட்டில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளராக அமடோ போட்டியிட இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரின் திடீர் மரணம் நாட்டுமக்களை கவலையடைய செய்துள்ளது.

பிரதமர் அமடோவின் மறைவுக்கு அதிபர் ஒட்டாரா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “30 ஆண்டு காலம் எனது நெருங்கிய நண்பனாக இருந்ததுடன் எனது தம்பியாகவும், மகனாகவும் விளங்கிய அமடோவுக்கு மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டின் மீது மிகுந்த விசுவாசம், பக்தி மற்றும் அன்பு கொண்ட ஒரு அரசியல்தலைவரின் நினைவுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என கூறி உள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பரிஸ் நகரில் சிகிச்சை முடித்துக்கொண்டு அபித்ஜான் விமான நிலையம் வந்திறங்கியபோது, “அதிபருடன் சேர்ந்து நமது நாட்டை முன்னேற்றுவதற்காகவும், கட்டியெழுப்புவதற்காகவும் என் பணியைத் தொடர்வதற்காக நான் திரும்பி வந்துள்ளேன்” என உற்சாகமாக கூறிய பிரதமர் அமடோ ஒரு வார காலத்துக்குள் மரணம் அடைந்திருப்பது அந்த நாட்டு மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தி உள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo