Header

காற்றில் பரவும் கொரோனா தொற்று – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

 

நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப்பற்றி அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிலும் இந்த எச்சரிக்கை அதிக பயத்தை ஏற்படுத்துகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றில் நோய் பரவும் என்றால் என்ன செய்வது? கொரோனா வைரசின் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் காற்றில் பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பதால் காற்றில் வைரஸ் பரவும் என அறிவிக்க கோரி உலக சுகாதார அமைப்புக்கு நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் எழுதி அனுப்பிவைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ், மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு எளிதாக தொற்றி விடுகிறது. ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது கொரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இதனை மாற்றி, காற்றில் கொரோனா வைரஸ் பரவும் என அறிவிக்க வேண்டும் என உலகில் உள்ள நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக ‘தி நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையை 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அடுத்த வாரம் வெளியிட உள்ளனர். அதற்கு முன்பாக உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும், ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டும் பரிந்துரையை மாற்றக் கோரியுள்ளனர். ஆனால், இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் உலக சுகாதார அமைப்பு இதுவரை வெளியிடவில்லை.

கொரோனா பாதித்த ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரின் உமிழ்நீரின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் சுவாசிக்கும் போது, வைரசால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாக ‘நியூயோர்க் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மருத்துவர் பெனிடெட்டா அலிகிரான்ஸி கூறுகையில், கொரோனா வைரஸ் நோய், காற்றில் பரவுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைக் கடந்த இரு மாதங்களாகக் கணித்து வருகிறோம். ஆனால், அதற்கான உறுதியான, நிலையான ஆதாரங்கள் இல்லாததால் அதை வெளியிடவில்லை,’ என குறிப்பிட்டுள்ளார்.

logo