Header

ட்ரம்பை கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்தது ஈரான்

உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு ஒருபுறம் புலம்பிக்கொண்டிருக்க, கொரோனா தொற்றையே மறந்துவிடும் அளவிற்கு பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் உலக அளவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது

அமெரிக்கா – சீனா , பிரச்சினை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, ஈரான் – அமெரிக்க பிரச்சினை மறுபக்கம் தலை தூக்கியிருக்கிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவானது

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

ஜனாதிபதி ட்ரம்பின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டை ஈரான் அரசு பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் ட்ரம்பை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பிடம் கோரியது.

அதுமட்டுமன்றி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, ட்ரம்ப் உள்ளிட்டோர் தப்பித்து செல்லாமல் இருக்க, சிவப்பு அறிக்கை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இன்டர்போலிடம் ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ட்ரம்பை தவிர, வேறு யாருக்கெல்லாம் இந்த பிடியாணை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈரான் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேசமயம் ட்ரம்பின் பதவிக்காலம் முடிந்த பிறகும் இந்த வழக்கில் அவர் மீதான விசாரணை தொடரும் என்பதை ஈரான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே ஈரான் அரசின் கோரிக்கைகள் குறித்து இன்டர்போல் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ட்ரம்புக்கு எதிராக ஈரான் பிடியாணை பிறப்பித்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *