Header

டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தை மின்னல் தாக்கிய திரில் வீடியோ காட்சி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டெல்டா விமானத்தின் மீது மின்னல் பாய்ந்த ‘திரில் வீடியோ’ வெளியாகியுள்ளது.

அட்லாண்டா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த தொடர் மழை காரணமாக இங்குள்ள ஹார்ட்ஸ்பீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டுச் செல்ல சில விமானங்கள் வரிசைகட்டி காத்திருந்தன. வானிலை லேசாக சீரடைந்ததும், ஒவ்வொரு விமானமாக ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து செல்லும் அழகை மற்றொரு விமானத்தில் அமர்ந்திருந்த ஜாக் பெர்கின்ஸ் என்ற பயணி தனது கேமராவில் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.

அந்த அழகிய அணிவகுப்பில், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் லாஸ் வேகாஸ் நகரை நோக்கி புறப்பட தயாராக வரிசையில் ஊர்ந்துக் கொண்டிருந்தது. அந்த காட்சியை அவர் மிக நெருக்கமான கோணத்தில் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு பிரமாண்ட மின்னல் அந்த விமானத்தின் வால் பகுதியை தாக்கியது.

சுமார் 18 வினாடிகள் நீடித்த அந்த மின்னலின் தாக்கம், ஜான் பெர்க்கின்சின் கேமராவில் மிகவும் தத்ரூபமாக பதிவாகியுள்ளது.

அந்த விமானத்தில் இருந்த 111 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்களில் யாருக்கேனும் இந்த சம்பவத்தால் காயங்களோ, பாதிப்போ ஏற்பட்டதா? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான விமான எண்:67, போயிங் 737 – 900-ஆர் விமானத்தை 18-8-2015 அன்றிரவு மின்னல் தாக்கியது உண்மைதான் என டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்கால விமானங்கள் அனைத்தும் மின்னல் தாக்கினால் அதன் பாதிப்பு மற்றும் தாக்கத்தை திசை திருப்பிவிடும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன என்பது, குறிப்பிடத்தக்கது.

இதனால் எத்தகைய வேகத்தில் மின்னல் தாக்கினாலும், அதில் இருந்து வெளியாகும் மின்சக்தி தாக்கும் வேகத்தைவிட சுமார் 10 மடங்கு வேகத்தில் திசைதிருப்பி வெளியேற்றப்படுவதால், அந்த விமானத்தை மின்னல் தாக்கிய சுவட்டினைகூட உள்ளே இருக்கும் பயணிகள் உணர முடியாது என விமான தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அட்லாண்டா விமான நிலையத்தில் இந்த டெல்டா விமானத்தை மின்னல் தாக்கிய அந்த திரில் வீடியோவை ஜாக் பெர்கின்ஸ் யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த காட்சி.., உங்கள் பார்வைக்கு.., வீடியோவாக..,

logo